கடந்த காலங்களில் இந்திய தொழில்துறையின் முன்னணி முகமாகத் திகழ்ந்த அனில் அம்பானி, தற்போது பண மோசடி குற்றச்சாட்டுகளாலும், சொத்து பறிமுதல் நடவடிக்கைகளாலும் கடும் சட்ட மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளார். இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், மறைந்த தொழில்துறை வல்லுநருமான திருபாய் அம்பானியின் இளைய மகனான அனில் அம்பானி, கடந்த காலத்தில் மிகப்பெரும் வணிகப் பேரரசை கட்டியாண்டவர் என்பது நாடறிந்த உண்மை. சகோதரர் முகேஷ் அம்பானியுடன் ரிலையன்ஸ் குழுமத்தைப் பிரித்துக்கொண்ட பின், அனில் அம்பானி ரிலையன்ஸ் ADA குழுமத்தை உருவாக்கி, தொலைத்தொடர்பு, மின்சாரம், நிதி மற்றும் அடுக்குமாடி கட்டுமானம் போன்ற பல துறைகளில் தனது தொழிலை விரிவுபடுத்தினார். 2000 ஆண்டின் தொடக்கத்தில் இவரின் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சியின் அடையாளங்களாகப் போற்றப்பட்டன.
ஆனால், கடந்த ஒரு தசாப்தத்தில் கடன்சுமை, போட்டி மனப்பான்மை மற்றும் நிர்வாகச் சிக்கல்களால் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்த அனில் அம்பானியின் வணிகப் பேரரசு, தற்போது வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருப்பதை அண்மையில் வெளியான பல்வேறு செய்திகள் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.
பல பண மோசடி குற்றச்சாட்டுகளாலும், சொத்து பறிமுதல் நடவடிக்கைகளாலும் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் கடும் நிதி மற்றும் சட்ட நெருக்கடிக்ளை அனில் அம்பானி தலைமையிலான நிர்வாகம் எதிர்கொண்டு வருகிறது.
அனில் அம்பானி எதிர்கொண்டு வரும் இந்தச் சரிவு அவரது தாய் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திலிருந்தே தொடங்கியது. கடன் சுமையில் சிக்கிய அந்த நிறுவனம் முற்றுலுமாக வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், அந்நிறுவனம் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் மோசடி செய்துள்ளதாகப் பல வங்கிகள் குற்றச்சாட்டு முன்வைத்தன.
குறிப்பாக STATE BANK OF INDIA மற்றும் BANK OF INDIA ஆகிய வங்கிகள், RCom நிறுவனத்தின் கடன் கணக்குகளை மோசடி என வகைப்படுத்தின. அதனடிப்படையில் அதுகுறித்துத் தங்கள் விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத்துறை இயக்குநரகம், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் நிதி அதிகாரி அசோக் பாலைப் பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்தது. போலி வங்கி உத்தரவாதம் மற்றும் போலி மின்னஞ்சல்கள் மூலம் நிதி முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையே, COBRAPOST என்ற புலனாய்வு விசாரணை ஊடகம் அனில் அம்பானி குழுமம் 2006-ம் ஆண்டிலிருந்து 41 ஆயிரத்து 921 கோடி ரூபாய் வரைப் பண மோசடியில் ஈடுபட்டதை அம்பலப்படுத்தியது. இந்தத் தொகையின் ஒரு பகுதி, வரிதவிர்ப்பு முறையைக் கையாளும் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் வழியாகக் கைமாற்றப்பட்டதையும் அந்த ஊடகம் விவரித்திருந்தது.
இது அமலாக்கத்துறை விசாரணையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த அனில் அம்பானி குழுமம், இவை அனைத்தும் தங்கள் போட்டியாளர்களின் பொய் பிரசாரம் என விளக்கம் அளித்தது. இருப்பினும் தீவிரமடைந்த அமலாக்கத்துறை விசாரணையின் விளைவாக, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்த அனில் அம்பானிக்குச் சொந்தமான 40-க்கும் மேற்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அனில் அம்பானியின் பாலி ஹில் வீடு உள்ளிட்ட இந்தச் சொத்துக்களின் மொத்த மதிப்பு 3 ஆயிரத்து 084 கோடி ரூபாய் என அமலாக்கத்துறைத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் காரணமாகப் புகழின் உச்சத்தில் இருந்த அனில் அம்பானியின் பெயரும், மோசடி என்னும் இருளில் மூழ்கியது.
இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் பல நிறுவனங்கள் தற்போது செபி, வங்கிகள் மற்றும் அமலாக்க அமைப்புகளின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றன. வங்கிகள் அனில் அம்பானி குழுமத்தின் கடன்களை மோசடி என வகைப்படுத்தியுள்ளதால், பிரச்னைகளைச் சமாளிக்க புதிய நிதி ஆதரவு கிடைக்காமல் அந்நிறுவனம் திணறி வரும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் ஒருகாலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கும், தொழில்முனைவு ஆற்றலுக்கும் முன்னுதாரணமாகப் போற்றப்பட்ட அனில் அம்பானி, இன்று தனது வணிகப் பேரரசை மீட்டெடுக்கக் கடும் போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார். சட்டம், நிதி மற்றும் குடும்பப்பெயர் என மூன்று தளங்களிலும் அவரைப் பல்வேறு சவால்கள் சூழ்ந்துள்ள நிலையில், எதிர்காலம் அனில் அம்பானிக்கு எப்படியான திருப்பத்தை அளிக்கும் என்பதே தொழில்துறை வட்டாரங்களில் ஒற்றைக் கேள்வியாக உள்ளது.
















