நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கில், கிரிக்கெட் வீரர் தோனியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதால் நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டுச் சம்பத்குமாருக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தோனி மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கானது நீதிபதிகள் சுப்ரமணியம், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், தோனியின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடும்படி சம்பத்குமாரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தோனி நீதிமன்றத்திற்கு வந்தால் காவல்துறை பாதுகாப்பு போன்ற பல்வேறு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதால், அவர் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.
















