ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு நடைபெற்றது என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாய் கிரிசில்டாவை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.
அவதூறு செய்வதற்காக, தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவேன் என்று ஜாய் கிரிசில்டா பலமுறை மிரட்டியதால் திருமணம் நடைபெற்றதாகவும்,
பணம் பறிக்கும் நோக்கில் கட்டாயப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட திருமணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் ஆணையத்தின் முன் நடந்த விசாரணையின்போது மாதந்தோறும் ஒன்றரை லட்சம் ரூபாய் பராமரிப்பு தொகை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தாம் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தாம் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை என்றும், குழந்தை தன்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
குழந்தை தொடர்பான வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தாம் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை என்றும், பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும் என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
















