பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. அதில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனையொட்டி நேற்று முன் தினம் மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
இறுதி கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகனும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினர். இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
பீகாரில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.92 கோடி ஆண் வாக்காளர்களும், 3.51 கோடி பெண் வாக்காளர்களும் இருக்கின்றனர். முதல் கட்ட தேர்தல் இன்று தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 11ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
















