மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சேமிப்பு கிடைக்கும் என பாஜக தொழில் துறை வல்லுநர்கள் பிரிவின் மாநிலத் தலைவர் சுந்தர்ராமன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது 15.5% ஆக இருந்த பொருளாதார சமநிலை வரி விகிதம் (Revenue Neutral Rate), கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய அரசின் சிறப்பான நிர்வாகத்தால் தற்போது 11.5% ஆகக் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதன் காரணமாகவே சாமானிய மக்கள் பயனடையும் வகையில் ‘ஜிஎஸ்டி 2.0’ சீர்திருத்தங்களை அரசால் கொண்டு வர முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் தற்போதைய நிதிநிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தமிழகத்தின் மொத்த கடன் சுமை ரூ.9 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் தொழில் துறை வல்லுநர்களை (Professionals) பாஜகவில் இணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















