சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் அனைவருக்கும் தொடர்பு உள்ளது என கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கை கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், இதுவரை உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரிகளான முராரி பாபு, சுதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்தது.
அதில், சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட சம்பவத்தில் தேவசம் போர்டின் பெரும்பாலான உயரதிகாரிகள் அனைவருக்கும் பங்கு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பரிசீலித்த நீதிபதிகள், எந்த நம்பகத்தன்மையும் இல்லாத உண்ணிகிருஷ்ணன் போத்தியை தேவசம் போர்டு அதிகாரிகள் எப்படி நம்பினார்கள் என கேள்வி எழுப்பினர்.
தேவசம் போர்டின் இந்த செயல்பாடுகள் உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கும், சட்ட விதிமுறைகளுக்கும் எதிரானதாது என்றும், தேவசம் போர்டின் நடவடிக்கைகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறினர். மேலும், தங்க தகடுகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
















