மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீயின்பாம் மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒருவர் கட்டியணைத்து முத்தமிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் முதல் பெண் அதிபராகப் பதவியேற்றவர் கிளாடியா ஷீயின்பாம். இவர் மக்களுடன் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது சாலையில் இறங்கி உரையாடுவது வழக்கம்.
அப்போது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொள்வதுடன் கைகுலுக்கி உரையாடி மகிழ்வர். அந்த வகையில் மெக்சிகோ நகரின் மையப்பகுதியில் காரில் இருந்து இறங்கிய அதிபர் கிளாடியா ஷீயின்பாம் மக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது மது போதையில் இருந்த ஒருவர், பின்னால் இருந்து அதிபர் கிளாடியா ஷீயின்பாமை கட்டியணைத்து முத்தமிட முயன்றார்.
ஆனால், அதற்குக் கோபப்படாத அதிபர் கிளாடியா, அந்த நபரின் கைகளை மென்மையாகத் தட்டிவிட்டு சிரித்தபடி, கவலைப்படாதீர்கள் எனக் கூறினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மெக்சிகோவில் அதிபருக்கே பாதுகாப்பில்லை என நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
இதற்குப் பதிலளித்துள்ள அதிபர் கிளாடியா ஷீயின்பாம், ஒரு பெண்ணிடம் அத்துமீற எந்த ஆணுக்கும் உரிமையில்லை என கூறினார். மதுபோதை நபர் கைது செய்யப்பட்டாரா எனும் விவரங்கள் வெளியாகவில்லை.
















