1963-ம் ஆண்டு தும்பாவில் தொடங்கிய இந்திய விண்வெளி பயணம், தற்போது “இந்தியாவின் பாகுபலி” என்றழைக்கப்படும் LVM 3 – M 5 ராக்கெட் மூலம், CMS – 03 செயற்கைக்கோளை விண்வெளிக்கு கொண்டு செல்லும் அளவுக்கு முன்னேறியுள்ளது. விண்வெளி துறையின் வளர்ச்சியில் தனியார் நிறுவனங்களும் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், 2033-ம் ஆண்டுக்குள் நாடு 44 பில்லியன் டாலர் தொழில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித் துறை அதிவேகமாக முன்னேற்றம் கண்டுள்ளது. தொடக்க காலத்தில் இந்தியா மிக எளிமையான சாதனங்களைக் கொண்டு தனது விண்வெளி ஆராய்ச்சியைத் தொடங்கியது. குறிப்பாகச் சில சோதனை ராக்கெட்டுகள், சைக்கிள்களில் கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டன.
இப்படி சிறு சிறு முயற்சிகளில் இருந்து தொடங்கிய இந்தியாவின் விண்வெளி பயணம், தற்போது சக்திவாய்ந்த ராக்கெட் தொழில்நுட்பங்களுடன் விண்வெளி திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது. முன்னதாகக் கடந்த 1963-ம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள தும்பாவில் இருந்து, இந்தியா தனது முதல் சவுண்டிங் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.
715 கிலோ எடையில் இருந்த அந்த ராக்கெட் 30 கிலோ உள்ளடக்கங்களுடன், 207 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்று சாதனை படைத்தது. விஞ்ஞானிகளின் அயராத முயற்சியால் குறைந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சாதனையே, இந்திய விண்வெளி பயணத்தின் வரலாற்று தொடக்கமாக அமைந்தது. இது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி திறனை வெளிப்படுத்தியதோடு, உலகளாவிய போட்டித் திறனையும் அதிகரிக்க வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் CHANDRAYAAN, ADITYA – L1, XPOSAT மற்றும் NISAR போன்ற விண்வெளி திட்டங்கள், இந்தியாவின் அறிவியல் திறனை மட்டுமல்லாமல், விண்வெளித் துறையில் நிரந்தரமான இடத்தைப் பிடிக்க முயலும் எண்ணத்தையும் வெளிப்படுத்தின. இந்நிலையில், தற்போது “இந்தியாவின் பாகுபலி” என்றழைக்கப்படும் சக்திவாய்ந்த LVM 3 – M 5 ராக்கெட், 4 ஆயிரத்து 410 கிலோ எடைகொண்ட CMS – 03 செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்தியது.
இது சுயாதீனமாக மிகப்பெரிய செயற்கைக்கோளை இயக்கும் நாடுகளுள் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ளதுடன், நாட்டின் விண்வெளி முன்னேற்றத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதற்கிடையே, இந்தியாவின் “SPACE VISION 2047” எனப்படும் நீண்டகால விண்வெளி திட்டமும், நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு “GAGANYAAN” விண்கலத்தின் முதல் சோதனையோட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து, 2027-ம் ஆண்டு விமானிகளுடன் “GAGANYAN” விண்கலத்தை நேரடியாக விண்வெளிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பாதையைத் திறக்கும் முக்கிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல், 2028-ம் ஆண்டு CHANDRAYAAN – 4 திட்டத்தின் மூலம், சந்திரனிலிருந்து மண் மற்றும் கல் மாதிரிகளைப் பூமிக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனுடன், “VENUS ORBITOR MISSION” எனப்படும், வெள்ளி கிரகத்தைச் சுற்றி ஆய்வு நடத்தும் திட்டமும் தொடங்கப்படவுள்ளது. இதன் அடுத்த கட்டமாக இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான BHARATIYA ANTARIKSH STATION, 2035-ம் ஆண்டுக்குள் முழுமையாக உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக வரும் 2040-ம் ஆண்டுக்குள் மனிதனை சந்திரனில் தரையிறக்கும் பெரும் இலக்கை அடையும் நோக்கில் இந்தியா பயணித்து வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி திறனையும், அதன் தலைமை நிலையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் அடித்தளங்களாகக் கருதப்படுகின்றன. அதே நேரத்தில், இந்தியாவின் விண்வெளி வளர்ச்சியில் தனியார் நிறுவனங்களின் பங்கும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக SKYROOT, AGNIKUL, PIXXEL போன்ற 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், விண்வெளித்துறையில் தங்களுக்கான இடத்தை உருவாக்கி வருகின்றன.
இந்த நிறுவனங்கள் அனைத்தையும் மேம்படுத்தி வரும் ISRO, செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை சோதனை வசதிகளை அவற்றுக்கு வழங்கி வருகிறது. இதன் மூலம், 2029-ம் ஆண்டுக்குள் ஆண்டிற்கு 50 ஏவுகணைகளைச் சோதனை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விண்வெளித் துறையின் இந்த முன்னேற்றம் காரணமாக, 2033-ம் ஆண்டுக்குள், விண்வெளி தொழில் வளர்ச்சி 44 பில்லியன் டாலர் அளவுக்கு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், SatCom, NavIC மற்றும் EARTH OBSERVATION சேவைகள் பூமியில் உள்ள மனித வாழ்க்கையின் பல துறைகளில், பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாகவும், கைவசமுள்ள 52 ராணுவ கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் பேரழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் துறை சார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
















