ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் குதிரை விற்பனைக்கு முதல் முறையாக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் புஷ்கர் கால்நடை கண்காட்சி நடைபெறுகிறது.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான கால்நடை கண்காட்சி கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இதில் நாடு முழுவதுமிருந்து கொண்டு வரப்படும் மாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் சண்டிகரை சேர்ந்த கேரி கில் என்பவருக்குச் சொந்தமான இரண்டரை வயது குதிரை 15 கோடிக்கும், ராஜஸ்தானைச் சேர்ந்த அன்மோல் என்ற எருமை 23 கோடி ரூபாய் வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டு கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தின.
இந்நிலையில் புஷ்கர் கால்நடை கண்காட்சியில் குதிரை விற்பனைக்கு முதல் முறையாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.
அதன்படி 40 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் குதிரைக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்துமாறு கண்காட்சியில் முகாமிட்ட அதிகாரிகள் கூறினர்.
இருப்பினும் எந்தக் குதிரையும் அந்த விலைக்கு விற்பனை செய்யப்படாததால் எந்த விவசாயிகளும் ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















