கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் உமா ரதி ராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும், திமுகவில் எம்எல்ஏ பொன்முடிக்கு பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாஜக மாவட்ட மகளிரணி தலைவி சுதா எழில் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்காத திமுக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே கொட்டும் மழையில் பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா சுரேஷ் மற்றும் தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஹேமா மாலினி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
















