திருப்பத்தூரில் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி திருப்பத்தூரின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டது.
இதற்கிடையே செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலை அருகே மழைநீர் குளம் போல் தேங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதி அடைந்தனர்.
பிரதான சாலையான இந்தக் கூட்டு சாலையை பல்வேறு பகுதியினர் பயன்படுத்தி வந்த நிலையில் அதிக அளவு மழைநீர் தேங்கியதால் மாற்றுப்பாதையை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டது.
இதே போல நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பும் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.
தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
















