ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே பாலம் கட்டுமான பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த நபர் உயிரிழந்தார்.
மேட்டுப்புத்தூர் ஊராட்சி பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்றிரவு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகநாதன், இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் இருசக்கர வாகனத்துடன் பள்ளத்தில் தவறி விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் ஒப்பந்த நிறுவனம், எச்சரிக்கை பலகை, பேரி கார்டு உள்ளிட்ட எவ்வித உபகரணங்களும் வைக்கப்படாததாலேயே விபத்து நேரிட்டதாகக் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஒப்பந்த உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற மாட்டோம் என உறவினர்கள் எச்சரித்துள்ளனர்.
















