பீகாரில் துணை முதலமைச்சர் கார்மீது ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் கற்களையும், செருப்பையும் வீசித் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
பீகார் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் 121 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் விஜய் குமார் போட்டியிடும் லக்கிசாராய் தொகுதியும் அடக்கம்.
தேர்தல் விறுவிறுப்பாக நடந்த நிலையில், தொகுதியில் ஓட்டுப்பதிவு குறித்து ஆய்வு செய்ய விஜய் குமார் காரில் கிராமம் கிராமமாக வந்தார்.
அப்போது துணை முதலமைச்சர் விஜய் குமாரை சூழ்ந்து கொண்ட ராஷ்ட்ரீய ஜனதா தள தொண்டர்கள், அவரது கார்மீது செருப்புகளையும், கற்களையும் வீசித் தாக்குதல் நடத்தினர்.
மேலும், முர்தாபாத் எனக் கோஷம் போட்டுக் கிராமத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பியிடம் செல்போனில் பேசிய விஜய் குமார், ஆர்ஜேடி குண்டர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அராஜகத்தில் ஈடுபடுகின்றனர் எனக் கூறினார்.
அவர்கள் தனது வாக்குச்சாவடி முகவரை மிரட்டி வெளியே விரட்டியதாகவும், வாக்காளர்களை வெளியே விட அவர்கள் மறுப்பதாகவும் கூறினார்.
இதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்.பி பதிலளித்த நிலையில், அவரைக் கோழை என்றும் பலவீனமானவர் எனவும் துணை முதலமைச்சர் விஜய்குமார் விமர்சித்தார்.
















