PERPLEXITY COMET AI பயனர்கள், COMET ASSISTANT-ஐ பயன்படுத்தி AMAZON தளத்தில் பொருட்களை தேடுவதை தடுக்க வலியுறுத்தி, அந்நிறுவனம் சார்பில் PERPLEXITY நிறுவனத்திற்கு சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் என PERPLEXITY நிறுவனம் தெரிவித்துள்ளது இதுபற்றி விரிவாக விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி WEB BROWSING மற்றும் தகவல் சேகரிப்புக்கு உதவும் முன்னணி நிறுவனமாக PERPLEXITY நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் உருவாக்கிய COMET என்ற AI WEB BROWSER-உம் மற்றும் அதற்கு உதவியாக செயல்படும் COMET ASSISTANT-உம், PERPLEXITY பயனர்களுக்கு விரைவாக தகவல்களை தேடவும், பொருட்களை ஒப்பிட்டு தேர்வு செய்யவும் உதவி வருகிறது. பயனர்களின் அனுபவங்களை மையமாக வைத்து தங்கள் தயாரிப்புகளை வடிவமைக்கும் PERPLEXITY நிறுவனம், அவர்களின் தேர்வையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க முன்னுரிமை அளிக்கிறது.
இதற்கிடையே PERPLEXITY நிறுவனத்தின் பயனர்கள் COMET ASSISTANT-ஐ பயன்படுத்தி AMAZON தளத்தில் பொருட்களை தேடுவதை தடுக்க, அந்நிறுவனம் சார்பில் PERPLEXITY நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், COMET ASSISTANT-ன் செயல்பாடுகளை தடுப்பது தங்கள் நிறுவனத்தின் பயனர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள PERPLEXITY நிறுவன தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ், AMAZON நிறுவனத்துடன் இணைந்து பயனர்களுக்கு நன்மை தரும் தீர்வை காண விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், இது தொடர்பாக PERPLEXITY நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட வலைபதிவிலும், AMAZON நிறுவத்தின் சட்ட அச்சுறுத்தல் அதன் பயனர்களுக்கு எதிரான மிரட்டல் என குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக AMAZON தளத்தில் உள்நுழையும் பயனர்கள் அவர்கள் தேடும் பொருட்களை விரைவாக கண்டுபிடிப்பதோடு, சிறந்ததை ஒப்பிட்டு தேர்வு செய்ய COMET ASSISTANT உதவுவதாக PERPLEXITY நிறுவனம் விளக்கியுள்ளது.
மேலும், இது பயனர்களின் நேரத்தை சேமிப்பதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், அவர்களின் உரிமைகளை பறிக்க AMAZON நிறுவனம் முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. AMAZON தளத்தில் உள்ள தகுதியற்ற பொருட்களை விற்பனை செய்வது இதன் மூலம் தடைபடுவதால், COMET ASSISTANT-ன் செயல்பாட்டை தடுக்க AMAZON நிறுவனம் நினைப்பதாகவும் PERPLEXITY நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் தனது பயனர்களுக்கு சிறந்த தேர்வுகளை வழங்க போராடிய AMAZON நிறுவனம், தற்போது பயனர்களின் நலனை மறந்து, வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதை வாடிக்கையாக்கியுள்ளதாகவும் PERPLEXITY நிறுவனம் விமர்சித்துள்ளது. அதே நேரத்தில், AMAZON நிறுவனத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல், PERPLEXITY நிறுவனமும் அதன் பயனர்களும் தங்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















