சென்னை நுங்கம்பாக்கத்தின் மையப்பகுதியான புஷ்பா நகரில் வசிக்கும் மக்கள் நாள்தோறும் பல்வேறு விதமான இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். நம்பி வாக்களித்து வெற்றிபெற வைத்த மாமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் தங்களை ஏமாற்றிவிட்டதாக அப்பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.
சேதமடைந்த நிலையில் காணப்படும் சாலைகள், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கழிவுநீர் என அவலநிலையில் காணப்படும் இப்பகுதி தான் சென்னை நுங்கம்பாக்கத்தின் மையப்பகுதியான புஷ்பா நகர். திமுகவின் சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவராக இருக்கும் சிற்றரசு தான் புஷ்பா நகரை உள்ளடக்கிய 110வது வார்டுக்கு உட்பட்ட 110வது வார்டின் மாமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.மழைநீர் வடிகால் பணிகள், சாலைப்பணிகள் என வருடத்தின் பெரும்பாலான நாட்களில் ஏதாவது ஒரு வேலை நடந்து கொண்டே இருப்பதால் புஷ்பா நகர் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குடிநீர் குழாய்கள் அமைக்கத் தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதும், மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதும் என உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் காணப்படும் சாலைகளில் இரவு நேரங்களில் பயணிக்கவே அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதிலும் சாலைகளின் இருபுறங்களிலும் தேங்கி நிற்கும் கழிவுநீரின் மூலமாகவும் அதிலிருந்து உருவாகும் கொசுக்களின் மூலமாகவும் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை சுகாதார சீர்கேடுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது சென்னையில் அதிகளவு பாதிப்பைச் சந்திக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றாக இந்தப் புஷ்பா நகர் பகுதியும் திகழ்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் இப்பிரச்னைகள் குறித்து வார்டு உறுப்பினர் சிற்றரசு தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் வரை பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தங்களின் வாழ்வாதரம் மேம்படும் என நம்பி வாக்களித்து வெற்றிபெற வைத்த வார்டு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் தங்களை ஏமாற்றிவிட்டதாகப் புஷ்பாநகர் பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
















