கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் ஆடம்பர ரியல் எஸ்டேட் ஜெட் வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. 3 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை விலை கொண்ட ஆடம்பர சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஆடம்பர வீடுகள் வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக, இந்தியாவின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களான DLF, Lodha, Oberoi Realty, Sobha போன்ற நிறுவனங்கள் எந்த ஒரு நடுத்தர வருமான வீட்டுத் திட்டத்தையும் தொடங்கவில்லை. மாறாக, பிரிமியம் ஆடம்பர சொகுசு வீடுகளையே அறிமுகப்படுத்தி உள்ளது. பெருநகரங்களில் 5 கோடி ரூபாய் முதல் மற்ற நகரங்களில் 3 கோடி ரூபாய் வரை இந்தச் சொகுசு வீடுகள் விலைகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
இந்தியாவில் சிறந்த சொகுசு சொத்து சந்தையைக் கொண்ட நகரங்களில் முதலிடத்தில் டெல்லி NCR, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகியவை உள்ளன. இந்தியாவின் மொத்த சொகுசு வீடுகள் கட்டுமானத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக இந்நகரங்களில் தான் கட்டப் படுகின்றன.
இந்தப் பிரிமியம் ஆடம்பர சொகுசு வீடுகளின் சராசரி விலை, இருப்பிடம் மற்றும் வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்து 4 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை உள்ளது. இந்த ஆண்டு மட்டும் இந்த ஆடம்பர சொகுசு வீடுகளின் விலைகள் 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிக நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர்கள், மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரிடமிருந்து அதிகரித்து வரும் தேவை காரணமாகவே, இந்த ஆடம்பர சொகுசு வீடுகளுக்கே முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முழுக் கவனம் செலுத்துகின்றன. கடந்த ஆண்டில் மும்பையின் ரியல் எஸ்டேட் சந்தையில் குடியிருப்பு விற்பனை 96,187 யூனிட்களை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகமாகும்.
மும்பையில் சொகுசு வீட்டுச் சந்தைப் பிரிவில் 20-50 கோடிக்கு இடைப்பட்ட விலையுள்ள வீடுகள் விற்பனை 143 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. அதுபோல் 5-10 கோடி விலையுள்ள வீடுகள் விற்பனை 112 சதவீதம்அதிகரித்துள்ளது. மேலும் 10-20 கோடி ரூபாய் விலையுள்ள வீடுகள் விற்பனை 68 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
அனைத்து இந்திய நகரங்களிலும், மும்பை 20-50 கோடிக்கு இடைப்பட்ட விலையில் உள்ள வீடுகளின் விற்பனையில் முன்னணியில் உள்ளது. சுமார் 4,560 கோடி ரூபாய்க்கு முன்விற்பனை பதிவுகளைச் செய்துள்ளது Lodha நிறுவனம். இந்நிறுவனம் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான பிரிவில் எந்தப் புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் இந்தக் காலாண்டில் இந்நிறுவனம் தொடங்கிய ஒரே ஒரு புதிய குடியிருப்புத் திட்டத்திலும் மொத்த வளர்ச்சி மதிப்பு மட்டும் 2,300 கோடி ரூபாய் ஆகும். நாட்டின் ஆடம்பர வீடுகளின் முதன்மையான சந்தையாக மும்பையை உள்ளது. அடுத்தபடியாக டெல்லி NCR உள்ளது.
டெல்லி NCR-ன் ஆடம்பரசொகுசு வீடுகளின் விற்பனை பரிவர்த்தனைகளில் 91 சதவீதம் குருகிராமில் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஆண்டு 9 சதவீத வளர்ச்சியுடன் பிரீமியம் ஆடம்பர சொகுசு வீட்டுவசதியின் இடமாகக் குருகிராம் மாறி வருகிறது. இந்த ஆண்டின் முதலிரண்டு காலாண்டுகளில் மட்டும், 5 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட சுமார் 5,168 ஆடம்பர சொகுசு வீடுகள் விற்று தீர்ந்துள்ளன.
தெற்கு புறச் சாலை (SPR) விற்பனை மட்டும் 39 சதவீதமாகும். மேலும், தெற்கு புறச்சாலை மற்றும் துவாரகா விரைவுச் சாலை ஆகியவை இரண்டும் சேர்ந்து, டெல்லி NCR மொத்த ஆடம்பர சொகுசு வீடுகள் விற்பனையில் 61 சதவீதத்தை வைத்துள்ளது. DLF நிறுவனத்துக்கு மும்பை மற்றும் குருகிராமில் இருந்து புதிய விற்பனை முன்பதிவுகள் 4,332 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. புனே, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய நடுத்தரப் பிரிவு வீடுகளின் விலையும் குறைந்தது ஒன்றரை கோடி ரூபாய் முதல் தொடங்குகிறது.
இந்தப் போக்கைப் பின்பற்றி, பெங்களூரு மற்றும் சென்னையில் பிரிகேட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் முற்றிலும் உயர் வருமானப் பிரிவிலேயே அமைந்துள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், சுமார் 11 மில்லியன் சதுர அடி பிரிமியம் ஆடம்பர சொகுசு குடியிருப்புத் திட்டங்களை இந்நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
வரலாற்று ரீதியாக இந்தியாவின் நகர்ப்புற வீட்டுவசதி என்பது நடுத்தர வருமான அளவில் இருந்து விலகிச் செல்வதையே இந்தப் பிரிமியம் ஆடம்பர வீடுகளின் விற்பனை எடுத்துக் காட்டுகிறது.ஒன்றரை கோடி முதல் 2 கோடி வரை விலை கொண்ட தொடக்க நிலை பிரிமியம் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் வேகமாகப் பிரபலமடைந்து வருகின்றன.
இந்தியாவின் பொருளாதாரம் ஜெட் வேகத்தில் வளர்ச்சியடைந்து வருவதால் உயர் வருவாய் பிரிவினர் அதிகரித்து வருகின்றனர். அதனால் அவர்களின்தேவையைப் பூர்த்தி செய்ய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதால் நடுத்தர மக்களின் வீட்டு கனவு பெருநகரங்களில் எட்டாக்கனியாகி வருகிறது.
‘அனைவருக்கும் வீடு’ என்ற முழக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசு கொண்டுவந்த மலிவு விலை வீடுகள், பல்வேறு காரணங்களால் வெற்றி பெறத் தவறியதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
















