புஜியன் என்ற நவீன விமானம் தாங்கிப் போர்க்கப்பலை, சீனா தன் கடற்படையில் முறைப்படி இணைத்துள்ளது.
சீனா லியோனிங், ஷான்டாங் என்ற இரண்டு விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களைக் கொண்டுள்ளது. அந்நாடு மூன்றாவதாகப் புஜியன் என்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலை வடிவமைத்துச் சோதனை செய்து வந்தது.
இந்நிலையில் பலகட்ட சோதனைகளுக்குப் பின், புஜியன் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட்டது. ஹைனான் மாகாணத்தின் சான்யா கடற்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் இந்தக் கப்பலின் சேவையைத் தொடங்கி வைத்தார்.
புஜியன் போர்க்கப்பலில் மின்காந்த உந்துவிசை அமைப்பு வாயிலாக விமான ஏவுதல் நடக்கிறது. இந்தப் போர்க்கப்பலில் அதிகளவில் ஆயுதங்கள் எடுத்துச் செல்வதுடன், கனரக விமானங்களையும் ஏவ முடியும். முதல் இரு விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களை விட, புஜியன் போர்க்கப்பல் மிகப்பெரியது.
தொழில்நுட்ப ரீதியாக, புஜியன் கப்பல் அமெரிக்காவின் போர்டு கப்பலின் ஏவுதல் அமைப்பை நெருங்கி உள்ளது. இருப்பினும் அமெரிக்காவின் போர்டு கப்பலே உலகின் மிகவும் சக்தி வாய்ந்த, திறன் மிக்க விமானம் தாங்கி கப்பலாகக் கருதப்படுகிறது.
















