அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் சாட் ஜிபிடி ஏஐ உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டியதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
கடந்த 2022-ல் அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகப்படுத்தியது. இதில் கேள்வி – பதில் முறையில் அனைத்து விஷயங்கள் பற்றிய தகவல்களை பெறலாம்.
புகைப்படம், வீடியோக்களை உருவாக்குதல் மற்றும் கோப்புகளை ஆராய்தல் எனப் பல்வேறு விஷயங்களையும் சாட் ஜிபிடி மூலம் செய்யலாம். இந்நிலையில் சாட்ஜிபிடி உயிரை மாய்த்து கொள்ள துாண்டியதாகவும், மனநல பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும், அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் சட்ட மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஜிபிடி 4ஓ எனும் பதிப்பு மனரீதியாக ஒருவர் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் இருப்பதையும் பொருட்படுத்தாமல் அதனை ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 4 பேர் உயிரை மாய்த்து கொண்டதால் ஓபன் ஏஐ நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
















