மத்திய அரசு ஒதுக்கிய கோதுமையை ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தாமதித்ததால் 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு உணவு வழங்கல் துறை இயக்குநர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக ரேஷன் கடைகளில் வழங்க இம்மாதம் 8 ஆயிரத்து 722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் தேதி நிலவரப்படி 12 ஆயிரத்து 753 கடைகளில் கோதுமை இருப்பு இல்லை என்றும், கோதுமை ஒதுக்கீட்டில் 50 சதவீதம் மட்டுமே இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேநிலை தொடருமானால், கோதுமை கிடைக்காத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்,
குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை தங்கு தடையின்றி கிடைக்க வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 100 சதவீத கோதுமையை அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து கடைகளுக்கும் கோதுமை அனுப்பப்படுவதை, கூட்டுறவு மாவட்ட இணை பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உணவு வழங்கல் துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
















