சென்னை பர்மா பஜாரில் காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்கச் சென்ற ஆர்பிஎப் காவலர் உட்பட இருவரை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் ரயிலில் ஏசி மெக்கானிக்காகக் கார்த்திக் என்பவர் கடந்த ஆறு மாதங்களாகத் தற்காலிக பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில்வே பணிமனையில் கடந்த மாதம் 28ஆம் தேதி பணியில் இருந்தபோது அவரது செல்போன் காணாமல் போயுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் பினோயிடம், கார்த்திக் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆர்பிஎப் காவலர், செல்போனை ட்ராக் செய்து பர்மா பஜாரில் சந்தேகிக்கும் வகையில் நின்ற சந்துரு என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆர்பிஎப் வீரர் மற்றும் ஏசி மெக்கானிக் கார்த்திக் ஆகியோரை, பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துரு மற்றும் இர்பான் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், பர்மா பஜாரில் ஆர்.பி.எப் காவலர் மற்றும் ஏசி மெக்கானிக் தாக்கப்பட்டதன் வீடியோ வெளியாகி உள்ளது.
















