உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் விதிமீறலில் ஈடுபட்ட இருசக்கர வாகன ஓட்டிக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகரை சேர்ந்த அன்மோல் சிங் என்பவர், கடந்த 4-ம் தேதி அங்குள்ள புதிய மண்டி பகுதிக்கு, தன் ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார்.
மேலும் ஸ்கூட்டருக்கான உரிய ஆவணங்களையும் உடன் எடுத்துச் செல்லவில்லை. இதன் காரணமாக ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார், அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இந்நிலையில் தனக்கு 20 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அன்மோல் சிங், அதனைச் சமூக வலைதளத்தில் பதிவிட வைரலானது.
இதனையடுத்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற சாமானியருக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்த உத்தரப்பிரதேச போலீசாரின் செயலை நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து விளக்கமளித்த அம்மாவட்ட எஸ்பி, அபராதம் விதித்த எஸ்ஐயின் தவறால் இந்தப் பிழை ஏற்பட்டதாகவும், அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
















