போர்ச்சூழல் எழுந்தால் அதை முறியடிப்பது தங்கள் உரிமை எனப் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுவைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 50 பேர் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தலிபான் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் வீரர்கள் 23 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து துருக்கியும், கத்தாரும் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையில் தற்காலிக போர் நிறுத்தம் அமலானது.
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தானின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், பாகிஸ்தான் தரப்பு பொறுப்பற்ற முறையில், துளியும் ஒத்துழைப்பு கொடுக்காமல் அனைத்து பழியையும் ஆப்கன் மீது சுமத்துவதாகக் கூறினார்.
மேலும், போர் புரிவது தங்களது முதல் தேர்வு அல்ல எனவும், ஆனால், போர்ச்சூழல் எழுந்தால் அதை முறியடிப்பது தங்கள் உரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
















