பாகிஸ்தானின் தொழில்துறை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
பாகிஸ்தான் பொருளாதர நிலை பல ஆண்டுகளாக அதல பாதாளத்தை நோக்கிதான் சென்றுகொண்டிருக்கிறது. உற்பத்தி, மின்சாரம், விவசாயம், ஏற்றுமதி, ஜவுளி என அனைத்து துறைகளுமே தொடர்ந்து சரிவை சந்தித்தபடிதான் உள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டு மக்கள் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்தது குறித்தும், அவர்களை சம்மந்தபட்ட நாடுகள் திருப்பி அனுப்பி வைத்தது குறித்தும் செய்திகள் வெளியாகின. நாட்டின் பொருளாதார நிலைமை சரி செய்ய நிதி கேட்டு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகளின் கதவுகளை பாகிஸ்தான் ஓயாமல் தட்டியபடியேதான் உள்ளது.
இருப்பினும் பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை சிறிதுகூட ஏற்றம் காணவில்லை. தற்போது வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் அதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகப் பாகிஸ்தானில் தனியார் நிறுவனங்கள் செய்யும் முதலீடு 46 சதவீதம் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அந்நாட்டின் தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக இயல்பாகவே வேலைவாயப்புகளும், ஏற்றுமதிகளும் வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளன. அதேபோல, பெரியளவிலான உற்பத்திகளும் நடப்பாண்டின் முதல் காலாண்டில் ஒன்றரை சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. இது குறித்து பேட்டியளித்த லாகூர் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் நிர்வாகக்குழு உறுப்பினர் அலி இம்ரான் ஆசிப், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தொழில்துறையின் அடித்தளம் சிதைவதை தாங்கள் பார்த்துக்கொண்டிருப்பதாகவும், முறையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளாவிட்டால், பாகிஸ்தான் தொழில்துறை முடக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் முதலீடு செய்ய யாரும் முன்வராதது, அந்நாட்டின் மீது உலகம் கொண்டுள்ள நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாகப் பொருளாதார நிபுணர் ஷாஹித் சலீம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பொருளாதார நிபுணரான டாக்டர் நவீத் மிர்சா, வலுவான உற்பத்தி அடித்தளம் இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சியைத் தக்கவைக்க முடியாது எனக் கூறியுள்ளார். ஒரு காலத்தில் பாகிஸ்தான் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகப் கருதப்பட்ட ஜவுளித்துறையும் தற்போது இறங்குமுகத்தில்தான் உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானில் ஜவுளி உற்பத்தி தற்போது பெரிய அளவில் முடக்கம் கண்டுள்ளது தெரிய வருகிறது. அதிகரிக்கும் மின்சார செலவுகள், ஒழுங்கற்ற நிதிக் கொள்கைகள், மூலப்பொருட்களுக்கான வரையறுக்கப்பட்ட அணுகுமுறை உள்ளிட்டவை உற்பத்தி துறையின் வீழ்ச்சிக்கான காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு எப்படி குடைச்சல் கொடுக்கலாம் என்பதை யோசிப்பதில் செலவிடும் நேரத்தை, பொருளாதாரத்தை மேம்படுத்தச் செலவிட்டிருந்தால், பாகிஸ்தான் பொருளாதாரம் என்றே வளர்ச்சி கண்டிருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
















