தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்படி, அண்டை மாநில ஆம்னி பேருந்துகளுக்குச் சாலை வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகளுக்குச் சாலை வரி விதிப்போம் எனக் கேரள மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கர்நாடகா உள்ளிட்ட மற்ற அண்டை மாநிலங்களும் சாலை வரி விதிப்போம் என கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் இன்று மாலை முதல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும், அண்டை மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















