இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் அங்கோலா முக்கிய பங்காற்றுவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 6 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கோலா தலைநகர் லுவாண்டா சென்றடைந்த குடியரசுத் தலைவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் ஜோனோ லூரென்சோ மற்றும் அதிகாரிகள் இணைந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, அங்கோலா அதிபர் ஜோனோ லூரென்சோ மற்றும் பிரதிநிதிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் அங்கோலா முக்கிய பங்காற்றுவதாகக் கூறினார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், ரயில்வே துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருவதாகப் பெருமிதம் தெரிவித்த அவர், இது போன்ற ரயில்களை அங்கோலாவிற்கும் வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பின்னர், அதிபர் ஜோனோ லூரென்சோவை சந்தித்து பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள்குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, இருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
















