பிரான்சில் பறவைக் காய்ச்சல் காரணமாக வலசை சென்ற ஆயிரக்கணக்கான கொக்குகள் கொத்து கொத்தாக உயிரிழந்திருப்பது விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு பிரான்சின் கிராண்ட் எஸ்டில் கடந்த மாதம் பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. இதையடுத்து பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவைகளை அழிக்க அவசர கால குழுக்கள் அமைக்கப்பட்டன.
பிரான்சின் பல்லுயிர் அலுவலகத்தின் கூற்றுப்படி இப்பகுதிக்கு வலசை வந்த 10 ஆயிரம் கொக்குகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் லொக் டு டெர் அருகே ஆயிரக்கணக்கான கொக்குகள் வலசை வரும் நிலையில் இப்பகுதியில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொக்குகள் இறந்த நிலையில் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஏரி பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்ததால் 3 ஆயிரத்து 900 கோழிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பறவை காய்ச்சலால் வலசை வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொக்குகள் உயிரிழந்த சம்பவம் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
















