டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் தொர்பாக பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு அமித்ஷா நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அவர்களின் உடல்நலம் குறித்தும், சிகிச்சை பற்றியும் அவர் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விபத்து தொடர்பாகவும், அதன் விசாரணை பற்றியும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமித்ஷா, கார் வெடிப்பு சம்பவத்தில் 3 முதல் 4 வாகனங்கள் சேதமடைந்ததாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அனைத்து கோணங்களிலும் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு, குற்றப் பிரிவு , தேசிய புலனாய்வு முகமை குழு, சிறப்புப் பாதுகாப்புக் குழு மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக குழு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அவர்கள் அனைத்து விசாரணைகளையும் துரிதமாக நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
செய்தி கிடைத்தவுடன் உடனடியாக பிரதமரிடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், முதற்கட்ட தகவல்களைப் பெற்ற பிறகு பிரதமருக்கு விளக்கமளித்ததாகவும் அவர் கூறினார். இந்த சம்பவத்தில் மக்களிடம் முழு உண்மையை சொல்வோம் என்றும் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
இதேபோல் கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், சம்பவம் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
















