டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலை குறித்து மத்திய உள்துறை அமித்ஷா மற்றும் உயர் அதிகாரிகளுடன் கேட்டறிந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் துயரத்தையும், வேதனையையும் அளிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், டெல்லியில் நடந்த துயரமான குண்டுவெடிப்பால் மிகுந்த வேதனையடைந்தாக தெரிவித்துள்ளார்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாகவும், சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் மனதை உடைத்ததாகவும் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
வரலாற்று நினைவுச் சின்னத்திற்கு அருகில் குறிவைத்து நடத்தப்பட்ட வன்முறைச் செயல் கண்டிக்கத்தக்கது என்றும், பயங்கரவாதச் செயலைச் செய்தவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், டெல்லி குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடையவும், இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பலம் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை விசாரித்து வரும் பாதுகாப்பு நிறுவனங்களை ஒற்றுமையாக நின்று முழுமையாக ஆதரிப்போம் என்றும், அனைவருக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான நமது உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவோம் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
















