சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் பகுதியைத் தாக்கிய வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான ஜின்ஜியாங்கில் பனிக்காலம் தொடங்கி உள்ள நிலையில் அங்குப் பனிப்புயல் தாக்கி உள்ளது.
மாகாணத்தின் தலைநகரான உரும்ச்சியில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச நவம்பர் மாத மழைப்பொழிவு சாதனையை இந்தப் பனிப்புயல் முறியடித்துள்ளது. உரும்ச்சி உட்பட 11 இடங்கள் கடுமையான பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் முக்கிய நெடுஞ்சாலைகளின் பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது. மோசமான வானிலை காரணமாக உரும்ச்சி மற்றும் கோர்லா இடையேயான பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சாலைகளில் தேங்கிய பனியை அகற்றும் பணியில் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தப் பனிப்புயல் அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
















