டெல்லியில் கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விடிய, விடிய நடைபெற்ற சோதனையில் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலை கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கார் வெடிப்புச் சம்பவம் , சதி செயலாக இருக்கக்கூடும் எனச் சந்தேகம் எழுந்த நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் டெல்லியில் பஹர்கஞ்ச், தர்யாகஞ்ச் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விடுதிகளில் விடிய, விடியப் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
















