பினாமிகள் பெயரில் பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் அறக்கட்டளைகளைத் தொடங்கி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூலித்தது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
அமலாக்கத்துறை தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி திரட்டியுள்ளதாகவும், சதி திட்டம் தீட்டவும், பயங்கரவாத செயலுக்கும் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஃப்ஐயின் அரசியல் அமைப்பு தான் எஸ்டிபிஐ என்பதும், இந்த இரண்டு அமைப்புகளுக்கும் நடந்த பண பரிமாற்றம் குறித்த ரகசிய டைரியை, பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ கட்சிக்கு வேட்பாளர் தேர்வு, பொது நிகழ்ச்சிகளை நடத்துதல், உறுப்பினர் சேர்க்கைக்கு பிஎப்ஐ தான் பணம் கொடுத்து உள்ளது என்றும், இரு அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து சமூக சேவைக்கு எனப் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஃப்ஐ சொத்துக்கள் பெரும்பாலும் அறக்கட்டளை பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இரு அமைப்பும், சிமி என்ற ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளில், உடற்பயிற்சி கூடங்கள் என்ற பெயரில் ஆயுத பயிற்சியும், தாக்குதல் நடத்துவற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டதாகவும், கேரள மாநிலத்தில் நடத்தி வந்த எட்டு அறக்கட்டளைகள் அடையாளம் காணப்பட்டு, 129 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் பினாமிகள் பெயரில் பிஎப்ஐ நிர்வாகிகள் அறக்கட்டளைகள் தொடங்கி, பயங்கரவாத செயலுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டியுள்ளதாகவும், ஏற்கனவே கைதான பிஎப்ஐ நிர்வாகிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்த 28 பேரின் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலவச கல்வி, மருத்துவ வசதிகள் செய்து தருவதுபோல முகாம்கள் நடத்தி, அதனை ஆவணப்படுத்தி, வெளிநாடுகளில் இருந்து பிஎப்ஐ நிர்வாகிகள் பணம் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















