அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கட்டாயம் குறுக்கு விசாரணையைச் சந்தித்துதான் ஆக வேண்டுமெனச் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, கடந்த 2023ம் ஆண்டு ‘டி.எம்.கே. பைல்ஸ்’ என்ற பெயரில், பலரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.
அதில் டி.ஆர்.பாலுவின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தனது பெயருக்கு அண்ணாமலை களங்கம் ஏற்படுத்தி உள்ளதாகவும், இதனால் 100 கோடி மான நஷ்டஈடு வழங்க அவருக்கு உத்தரவிடக் கோரியும் டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தரப்பு சார்பில் குறுக்கு விசாரணை நடத்தப்படவிருந்தது. ஆனால் குறுக்கு விசாரணைக்கு டி.ஆர்.பாலு ஆஜராகவில்லை.
அப்போது, இன்றைக்கு இல்லை என்றால் என்ன? மற்றொரு தேதியில் டி.ஆர்.பாலு ஆஜராகி தானே ஆக வேண்டும் என நீதிபதி கூறினார். இதனையடுத்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
















