டெல்லியில் செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்து சிதறியதில் 12பேர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி பற்றிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். அதுபற்றிய செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
டெல்லியில் பரபரப்பான சுற்றுலாத் தலமான செங்கோட்டையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்துடன் கார் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி குண்டுவெடிப்புக்குக் காரணமான ஹரியானா பதிவு எண்ணைக் கொண்ட ஹூண்டாய் i20 கார், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளது.
பதர்பூர் எல்லையிலிருந்து டெல்லிக்குள் நுழைந்து, அவுட்டர் ரிங் ரோடு வழியாகப் பழைய டெல்லிக்குள் நுழைந்துள்ளது. செங்கோட்டை அருகே உள்ள சுனேஹ்ரி மசூதியின் வாகன நிறுத்துமிடத்தில் கார் கிட்டத்தட்ட சுமார் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் காரை ஒட்டி வந்த உமர் முகமது ஒரு நிமிடம் கூடக் காரை விட்டு வெளியே வரவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகன நிறுத்துமிடத்தில் உமர் முகமது யாரையும் சந்திக்கவில்லை என்றாலும், யாரோ ஒருவருக்காக உமர் காத்திருந்ததாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைக்கான உத்தரவுகளைப் பெறவேகாத்திருந்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வாகன நிறுத்துமிடத்தை விட்டு வெளியேறி அந்தக் கார் மத்திய டெல்லிநோக்கிச் சென்றுள்ளது. செங்கோட்டை மெட்ரோ நிலைய முதல் நுழைவாயில் சிக்னல் அருகே உமர் முகமது ஒட்டிச் சென்ற கார் வெடித்து சிதறியது.
இதில் காரின் வெடித்த பாகங்கள் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டதால், சாலையில் சென்றவர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் நிலைகுலைந்து போயினர். இந்த வெடிப்பால் அருகிலுள்ள பல கார்கள் எரிந்து நாசமாகின. காரை ஒட்டிச் சென்ற முகமது உமர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் ஒரு டெட்டனேட்டரை வைத்து காரை வெடிக்கச் செய்தது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் கொண்டு வெடிவிபத்தை நடத்தியதையும் புலனாய்வு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்தக் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக டெல்லி காவல்துறை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் குற்வழக்குப் பதிவு செய்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (NSG) உள்ளிட்ட பல அமைப்புகள் புலனாய்வு செய்து வருகின்றன.
இந்தக் குண்டுவெடிப்பில் பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்றும், தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்றும் பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. வெவ்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சுமார் 13 சந்தேகத்துக்குரிய நபர்களைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப் படுத்தியுள்ளனர். குறிப்பாக, வெடித்து சிதறிய கார் உமர் முகமது பேரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கார் பலபேரிடம் கைமாறியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடித்து சிதறிய ஹூண்டாய் i20 கார் முகமது சல்மானுக்குச் சொந்தமானது என்று கண்டுபிடித்த ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். சல்மான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த காரை சல்மான் கடந்த மார்ச் மாதம் தேவேந்தர் என்பவருக்கு விற்றதாக விசாரணையில் கூறியுள்ளார்.
முதலில் நதீம் என்பவருக்கும், பின்னர் ஃபரிதாபாத்தில் உள்ள ராயல் கார் ஸோன் என்ற கார் டீலருக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்களின் மொபைல் போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அமீர் என்பவரிடம் விற்கப்பட்ட அந்தக் காரை புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் என்பவராலும் இறுதியாக, முகமது உமராலும் வாங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை உறுதி படுத்தியுள்ளனர். புல்வாமாவில் தாரிக்கை ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.
முன்னதாக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகப் போஸ்டர் ஒட்டிய டாக்டர் அடில் ராதர் கைது செய்யப்பட்டதும், அவர் கொடுத்த தகவலின் பேரில் டாக்டர் முஜம்மில் ஷகீல் என்பவர் ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டதும், அவரிடமிருந்து 2,900 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கிகள் டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்ததும் குறிப்பிடத் தக்கது.
இதில் காரை ஒட்டி வந்து வெடிக்க வைத்த முகமது உமர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுகிறது. தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (NSG) குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை குழு உள்ளிட்ட பல புலனாய்வு அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் இருந்து செயல்பட்டதால் டெல்லியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
















