இரண்டு வீடுகளை வாடகைக்கு விடுவதாகக் கூறி 10க்கும் அதிகமான குடும்பங்களை ஏமாற்றி ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் பணத்தை சுருட்டிய மோசடி மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். அக்மார்க் ஜெண்டில்மேன் கெட்டப்பில் சதுரங்க வேட்டை திரைப்படத்தையும் மிஞ்சும் அளவிற்கு மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கம் அருகே உள்ள கெருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் தனக்கு சொந்தமான இரண்டு வீடுகள் கொண்ட குடியிருப்பை வாடகைக்கு விடுவதாகக் கூறி நோ புரோக்கர் செயலியில் பதிவிட்டுள்ளார். சென்னை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடும் பலர் ஸ்ரீவத்ஸை தொடர்பு கொண்டு குத்தகைக்கு வருவதாக கூறி 5 முதல் 10 லட்சம் வரையிலான பணத்தை கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர்.
ஒவ்வொருவரிடமும் பணத்தை வாங்கும்போது, ஏற்கனவே குடியிருப்பவர்கள் காலி செய்யக் கால அவகாசம் வேண்டுமெனவும், அவர்கள் காலி செய்தபின்பு குடியேற அழைப்பும் விடுத்துள்ளார். ஆன்லைன் மூலமாக மட்டுமல்லாமல் நேரில் வந்து வீட்டைப் பார்த்தவர்களும் ஸ்ரீவத்ஸ்விடம் பல லட்ச ரூபாயை கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர். பணத்தை ரொக்கமாகக் கொடுப்பவர்களிடம் அதனை எண்ணி கூடப் பார்க்காமல் உங்களின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் ஸ்ரீவத்ஸ் கூறியுள்ளார். அதிலும் கவர் சுற்றிய பணத்தை வாங்கும்போது எடையை வைத்தே பணத்தின் அளவை முடிவு செய்துவிடுவேன் எனப் பேசிய வீடியோ காட்சிகளும் பதிவாகியுள்ளன. இருவீடுகளை மட்டுமே வைத்திருந்த ஸ்ரீவத்ஸ் 15-க்கும் மேற்பட்டோரிடம் இதே போன்று கூறி ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளார்.
பணத்தை கொடுத்தவர்கள் குடியிருக்க வருவதற்கான தேதி நெருங்கிய நிலையில் ஸ்ரீவத்ஸ் தன்னுடைய மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். பணத்தை பறிகொடுத்தவர்கள் விட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
வீட்டின் முன்புறமாக இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பாதிக்கப்பட்ட மக்கள், ஸ்ரீவத்ஸ் வீட்டை காலி செய்யும் போது பயன்படுத்திய வாகனத்தை விசாரணை செய்து அதன் மூலம் மாங்காட்டில் தங்கியிருந்த ஸ்ரீவத்ஸை கண்டுபிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பணத்தை ஏமாற்றியது குறித்து கேள்வி எழுப்பும் போது எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே வந்தாலும் தம்மை ஒன்றும் செய்ய முடியாது என ஸ்ரீவத்ஸ் பேசியிருக்கிறார்.
மவுலிவாக்கத்தைப் போலவே வேறு ஏதேனும் பகுதியில் இதே போன்று மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாக வீடுகளை வாடகை மற்றும் குத்தகைக்கு பார்ப்போர் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















