பொங்கல் பண்டிகைக்காக உற்பத்தி செய்த வேட்டி சேலையில், தேக்கமடைந்துள்ள 13லட்சம் வேட்டிகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காகக் குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி வருகிறது. கடந்தாண்டு தலா ஒரு கோடியே 77லட்சம் வேட்டி, சேலை கொள்முதல் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அரசின் சார்பில் கொள்முதல் தரப் பரிசோதனை போது 13லட்சம் வேட்டிகள் பாலிஸ்டர் காட்டனை விடக் கூடுதலாக இருந்ததால் அரசு கொள்முதல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், வேட்டியை மீண்டும் தரப் பரிசோதனை செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் தமிழ்நாடு தொடக்க கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல் திருப்பூர் பகுதியை சேர்ந்த 65 சங்கங்களில் வேட்டிகள் கொள்முதல் செய்யாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், கூட்டுறவு சங்கங்களுக்கு நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கும் நிலையில், வேட்டியில் பாலிஸ்டர் இருப்பதற்கு நெசவாளர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.
















