மூளையில்லாமல் பிறந்த பெண் குழந்தை, மருத்துவர்களின் கணிப்பையெல்லாம் முறியடித்து, 20ஆவது பிறந்தநாளை கொண்டாடிய அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது. வியத்தகு சம்பவம்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தற்போது பார்க்கலாம்…
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த அலெக்ஸ் சிம்ப்ஸன் தான், நம் அனைவரின் புருவம் உயரக் காரணமான நபர்… 20 ஆண்டுகளுக்கு முன்பு ஷான் சிம்ப்ஸ்ன்- லொரெனா சிம்ப்ஸன், தங்களது குழந்தையின் வருகையை மிகுந்த எதிர்பார்ப்போடு எதிர்நோக்கியிருந்த தருணம் அது. ஆனால், அழகான அந்தப் பெண் குழந்தையைக் கொஞ்சி மகிழ முடியாமல் பெற்றோர் துடித்துப் போக நேரிட்டது.
காரணம் குழந்தை அலெக்ஸ் சிம்ப்ஸன், ஹைட்ரனென்செபாலி (Hydranencephaly) என்ற அரிய வகை நரம்பியல் கோளாறுடன் பிறந்திருந்தார். இந்தக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளையின் பெரும்பகுதி இல்லாமல் இருக்கும் என்பதால், அலெக்ஸ சிம்ப்ஸன், 4 வயது வரை மட்டுமே உயிருடன் இருப்பார் என்று அவரது பிறந்தநாளிலேயே இறப்பு தேதியையும் சேர்த்தே குறித்துவிட்டது மருத்துவ உலகம். மருத்துவர்கள் அவளுடைய நிலைமையைப் பற்றிக் கூறிய பிறகு, பெற்றோர் பயந்தார்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, ஆனால் நம்பிக்கை அவர்களைத் தொடர்ந்து காப்பாற்றியது.
விதி வலியது என்பது போல், நான்கு வயதை கடந்தும் அலெக்ஸ் உயிர்ப்புடன் இருந்தார். தற்போது தனது 20வது பிறந்தநாளையும் கொண்டாடியிருப்பதோடு, மருத்துவர்களின் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கி, மருத்துவ அதிசயமாகத் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். அலெக்ஸுக்கு, என் சுண்டுவிரலில் பாதி அளவே மூளையின் பின்புறம் உள்ள செரிபல்லம் இருந்ததாகக் கூறும் அவரது தந்தை, அலெக்ஸால் பார்க்கவோ, கேட்கவோ முடியாது என்றும் கூறுகிறார்.
எனினும் சுற்றி உள்ளவர்களின் உணர்வுகளையும், அவர்களது இருப்பையும் அலெக்ஸால் உணர முடியும் என்றும் அவர் தெரிவிக்கிறார். அவரது கண் அசைவுகள் அவள் எதிர்பார்ப்பதை உணர்த்தும் என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, 5,000-ல் ஒரு கர்ப்பத்தில் அல்லது 10,000-ல் ஒரு கர்ப்பத்தில் ஹைட்ரானென்ஸ்பாலி ஏற்படுகிறது, அவர்களில் பெரும்பாலோர் ஓராண்டுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை . ஆனால் அலெக்ஸின் 20 ஆண்டுகால வாழ்க்கை மருத்துவ உலகையே வியக்க வைத்துள்ளது.
















