டெல்லி கார் வெடிப்பு வழக்கை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்திருக்கிறது என்ஐஏ… கார் வெடிப்பை நிகழ்த்தியதாகச் சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் உன் நபி உயிரிழந்தாரா? அல்லது தப்பிவிட்டாரா என்பதை கண்டறியும் முயற்சியை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
டெல்லி கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கைத் தேசிய பாதுகாப்பு முகமை கையில் எடுத்திருக்கிறது. கார் வெடிப்பு சம்பவத்திற்கு பின்னால் பயங்கரவாத சதித்திட்டம் இருக்கலாம் என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ள நிலையில், இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த விசாரணையில், கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய கார், காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் உமர் உன் நபிக்குச் சொந்தமானது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் ஃபரிதாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் அந்த மருத்துவருக்குத் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை ஏற்கனவே உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் உன் நபி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஃபரிதாபாத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு டாக்டர்களுடன் தொடர்பில் இருந்ததை புலனாய்வுத்துறை உறுதிபடுத்தியுள்ளது… ஃபரிதாபத்தில் இரு மருத்துவர்கள் கைதானதைத் தொடர்ந்து, டாக்டர் உமர் உன் நபி காணாமல் போனதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லி கார் வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற ஹூண்டாய் i20 காரை உமர் உன் நபி ஓட்டிச் சென்றிருக்கலாம் என்றும், தன்னுடையை கூட்டாளிகள் கைதானதை அறிந்து, கார் வெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என்றும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் கார் வெடிப்பு ஒரு தற்கொலை தாக்குதலாக இருந்திருக்கலாம் என்றும், அதனை உமர் உன் நபி நடத்தியிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் வலுத்துள்ளன. கார் முதலில் சல்மான் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும், பினனர் தேவேந்தர், அதன் தொடர்ச்சியாகத் தாரிக். இறுதியாக உமர் உன் நபிக்குக் கைமாறியிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை வைத்தே அந்தக் காரை உமர் உன் நபிதான் இயக்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.
அதே நேரத்தில் ஃபரிதாபாத்தில் 2900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் உமர் உன் நபியும் ஒருவர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட வெடிபொருட்களை உமர் டெல்லியில் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.
உயிரிழந்தவர்களின் உமர் உன் நபியும் ஒருவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உமர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஃபரிதாபாத்தில் உள்ள அல்ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றிய நிலையில், அவர் எவ்வளவு காலம் அங்குப் பணிபுரிந்தார் என்பதையும், மற்றவர்களுடன் அவருக்கு எந்த அளவிற்கு தொடர்பு உள்ளது என்பதையும் புலனாய்வுத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும் ஃபரிதாபாத்தில், உமர் உன் நபி மற்றும் ஷகிலின் நடமாட்டத்தைக் கண்டறிய, பல பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஸ்கேன் செய்து வருகின்றனர். வெடிபொருட்களைச் சேமித்து வைப்பதற்கும், இயக்கங்களை ஒருங்கிணைப்பதற்கும் இருவரும் இணைந்து பணியாற்றியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில், உமர் உன் நபியின் மூன்று குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஆறு பேரைக் கைது செய்யப்பட்ட நிலையில் தேசிய பாதுகாப்பு முகமையின் விசாரணை வளையம் விரிவடைந்து வருகிறது… விரைவில் சதித்திட்டத்திற்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















