மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தீப தூணைச் சுற்றி காவல்துறையினர் வேலிகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில், கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது பண்டைய கால பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக நெல்லித்தோப்பு அருகேயுள்ள பகுதியில் அறநிலையத்துறை சார்பில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணுக்கு யாரும் செல்ல முடியாத வகையில், காவல்துறையினர் மரக்கட்டைகளை கொண்டு வேலிகள் அமைத்துள்ளனர்.
அதே நேரத்தில், அறநிலையத் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து இந்த ஆண்டும், நெல்லித்தோப்பு அருகேயுள்ள பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்ற முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















