சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடி கிராமத்தில் மந்தை முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலை பல ஆண்டுகளாக கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர்.
கோயிலை கையகப்படுத்த அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் வெளியிட்ட நிலையில், அதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நத்தம் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவினர் மற்றும் சிறுகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம.சீனிவாசன், சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
SIR விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அவர் சாடினார். பிரதமர் மோடி ஆட்சியில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் ராம.சீனிவாசன் கூறினார்.
















