இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடுகளைப் புனரமைப்பதற்காகப் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணம், கராச்சிக்கு ஹவாலா மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
என்ஐஏ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், இந்தியா மற்றும் இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பை, மீண்டும் புனரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா எனத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த குணா, புஷ்பராஜா உள்ளிட்ட 10 பேர் திருச்சியில் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும், அதில், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் பணத்தை திரட்டத் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பைப் புனரமைக்க முடிவு செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சதிச்செயலை கண்டுபிடித்து, 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதற்கான ஆதாரங்கள், ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் மற்றும் போதை மருந்துகள் கடத்துவதில் அனுபவம் வாய்ந்த கராச்சியில் உள்ள ஹாஜி சலீம் என்பவருடன் இலங்கையை சேர்ந்தவர்கள் தொடர்பில் இருந்ததாகவும், ஹாஜி சலீம்க்கு அனுப்பியுள்ள ஆவணங்களை குணா மற்றும் அவரது மகனிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பணப்பரிவர்த்தனையும் ஹவாலா மூலமாக நடந்துள்ளதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
















