ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர், சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது தப்ப முயன்றதால் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. ‘
இந்த கோயிலில், மாரிமுத்து என்பவர் பகல் நேரத்திலும், தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகியோர் இரவு நேர காவலாளியாகவும் பணியாற்றி வந்தனர்.
இரவு நேர காவல் பணியில் வழக்கம்போல பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஈடுபட்ட நிலையில், கோயிலில் புகுந்த மர்மநபர்கள் சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு சென்ற காவலாளிகளை பயங்கர ஆயுதங்களால் மர்மநபர்கள் தாக்கிவிட்டு உண்டியலை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக பகல் நேர காவலாளி மாரிமுத்து அளித்த தகவலின்பேரின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நாகராஜ் என்பவரை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது, எஸ்ஐயை தாக்கிவிட்டு தப்ப முயன்ற நாகராஜனை காவல் ஆய்வாளர் சுட்டுப்பிடித்தார். காயமடைந்த எஸ்ஐ மற்றும் நாகராஜன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
















