விசராணைக்கு வந்த இளைஞர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞர்களின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் 2023ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மீண்டும் பணிக்குச் சேர்ந்த பல்வீர்சிங், சிபிசிஐடி போலீசார் தன் மீது பதிவு செய்துள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சபிக் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபிதி, போதைப்பொருள் கடத்தலை தடுத்தி நிறுத்தி உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிமீது வழக்குப்பதிவு செய்தால் அதிகாரிகள் எவ்வாறு குற்றத்தை தடுக்க முன்வருவார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
மனுதாரர் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் 20 லட்சம் வரை அபராதம் விதிக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
















