மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரின் மர்ம மரணத்தில் தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் வழக்கு விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளைஞரின் மர்ம மரணத்தில் தற்போது வரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை வரும் 27ஆம் தேதிக்குள் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
















