அயோத்தி, காசி உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பாஜக அலுவலகமும் அவர்களது இலக்காக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
நாட்டை உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தின் காட்சிகள் இவை. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இந்தக் கார் வெடிப்புச் சம்பவம் தவறுதலாக நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிப்பதுதான் பயங்கரவாதிகளின் நோக்கமாக இருந்துள்ளது. ஆனால், அந்த காரை செங்கோட்டை பகுதியில் வெடிக்க செய்ய வேண்டும் எனப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கவில்லை என கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள விமானப்படை அலுவலகம், நாடாளுமன்ற சாலை, இந்திய ராணுவத்தின் கட்டடமான சேனா பவன், பாஜக அலுவலகம் உள்ளிட்டவைதான் பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருந்துள்ளது. மேலும், அயோத்தியில் உள்ள ராமர் கோயில், காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம் உள்ளிட்ட இந்துமதத்தின் ஆன்மிக தலங்களும் பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கிய பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாதிகள் திட்டமிட்டு வந்துள்ளனர்.
இதற்காகக் கடந்த 2 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட்டை அவர்கள் சேகரிக்க தொடங்கியுள்ளனர். வெடிபொருட்கள் குறித்த தகவல்களை ரகசியமாகப் பகிர்ந்துகொள்ள code word-களையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். குண்டுவெடிப்பை குறிக்க ‘தாவத்’ என்ற வார்த்தையும், வெடிபொருட்களைக் குறிக்க ‘பிரியாணி’ என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. “தாவத் கே லியே பிரியானை தாய்யார் ஹை” என்பது முக்கிய code word-ஆக இருந்துள்ளது.
விருந்துக்குப் பிரியாணி தயாராக உள்ளது என்பது இதன் பொருள். இந்தச் சூழலில்தான், கடந்த அக்டோபர் 19ம் தேதி காஷ்மீரின் பல பகுதிகளில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த அதீல் அகமது ராதர் என்பரை கைது செய்தனர். அதேபோல், ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் முஜாமில் ஷகீல் என்ற மற்றொரு மருத்துவரும் கைதானார்.
ஃபரிதாபாத்தில் இருந்து மட்டும் 2 ஆயிரத்து 900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதும் பேசுபொருளானது. இதில் தொடர்புடைய மற்ற பயங்கரவாதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டது. இந்தச் சூழலில்தான் டெல்லி கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு பயந்து, சேகரிக்கப்பட்ட வெடிப்பொருளை வேறு இடத்திற்கு உமர் நபி மாற்ற முயன்றிருக்கலாம் எனவும், அப்போது எதிர்பாராத விதமாகக் கார் வெடித்திருக்கலாம் என்றும் சில அதிகாரிகள் கருதுகின்றனர். பயங்கரவாதிகளிடையே ஏற்பட்ட பீதிதான் இந்தக் கார் வெடிப்புக்குக் காரணம் என்பது அவர்களது வாதமாக உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் மற்றொரு கோணமும் முன்வைக்கப்படுகிறது.
பயங்கரவாதிகளான அதீல் அகமது ராதரும், முஜம்மில் ஷகிலும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால் உமர் நபி தூண்டப்பட்டுள்ளார். எனவே, டெல்லி செங்கோட்டை பகுதியில் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, காரின் பின் இருக்கையில் வெடிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு அவர் செங்கோட்டை பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால், திங்கட்கிழமைகளில் செங்கோட்டை மூடப்படும் என்பதையும், அங்கு மக்கள் குறைந்த அளவில்தான் இருப்பார்கள் என்பதையும் அவசரத்தில் அவர் கவனிக்க மறந்துவிட்டார். நேரில் சென்று பார்த்தபோதுதான் உண்மை நிலவரம்அவருக்குப் புரிந்துள்ளது. பின்னர் உமர் நேதாஜி சுபாஷ் மார்க் பகுதிற்கு அவர் சென்றுள்ளார்.
செங்கோட்டைக்கும், சாந்தினி சவுக்கிற்கும் அங்கிருந்து செல்ல முடியும். ஆனால், அந்த இடத்திலும் அவர் தாக்குதல் நடத்தவில்லை. ஏதோ காரணங்களால் அங்கிருந்தும் கிளம்பி சென்ற அவர், செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே சிக்னலில் காரை நிறுத்தி வெடிக்க செய்துள்ளார். இது டெல்லிசம்பவம் குறித்த மற்றொரு கோணமாக உள்ளது. இவை அனைத்தும் வெறும் யூகங்கள் மட்டும்தான். டெல்லி கார் வெடிப்பு விவகாரத்தின் பின்னணி குறித்து இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை. பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றவண்ணமே உள்ளது.
















