டெல்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்களின் நெட்ஒர்க் தொடர்புகள் தென் மாநிலங்களில் உள்ளதா என மாநில உளவுப்பிரிவு போலீசாருடன், மத்திய உளவுப்பிரிவினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி நடந்த பயங்கவாத கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
முன்னதாக, கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர் உட்பட பெரும்பாலான மருத்துவர்கள் கார் வெடிகுண்டு தாக்குதலின் பின்னணியில் இருந்ததை உளவு அமைப்புகள் கண்டுபிடித்தனர்.
கார் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள், நேரடியாக களத்தில் இறங்கியவர்கள், மூளையாக செயல்பட்டவர்கள், நிதி உதவி செய்தவர்கள் உள்ளிட்டோரின் பட்டியலை விசாரணை அமைப்புகள் சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், டெல்லியில் வெடிகுண்டு வெடித்த அடுத்த விநாடியே தமிழக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில், கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்களின் வலைப்பின்னல் தொடர்புகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ளதா என மத்திய உளவுப்பிரிவு போலீசாரும் மாநில உளவு பிரிவு போலீசாரும் ஒருங்கிணைந்து ரகசிய விசாரணை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
















