அமெரிக்க நாடாளுமன்றம் வரலாற்றிலேயே, மிக நீண்ட கால அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு குறுகிய கால நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், முந்தைய அதிபர் ஜோ பைடன் அரசின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகிறார்.
இதனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அரசு துறைகளுக்கான நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமெரிக்க அரசாங்கம் முடங்கியது. அமெரிக்காவில் நிதி முடக்கத்தால் 6 லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ள நிலையில், 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால அரசு முடக்கத்திற்குப் பிறகு அரசாங்கத்தை மீண்டும் திறப்பதற்கான குறுகிய கால செலவின மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபை அங்கீகரித்துள்ளது.
அதிபர் டிரம்ப் சபை நடவடிக்கையில் கையெழுத்திட்டவுடன், பணிநிறுத்தம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
















