மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான செல்லூர் திருவேப்புடையார் கோயிலின் தெப்பக்குளத்தை மூடிவிட்டு வணிக நிறுவனங்கள் கட்ட முயற்சிப்பதாக இந்து சமய அறநிலையத்துறை மீது புகார் எழுந்துள்ளது. தெப்பக்குளம் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை அனுப்பியிருக்கும் பதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான மதுரை செல்லூர் திருவேப்புடையார் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் 30 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள பழமை வாய்ந்த தெப்பக்குளத்தை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்திருக்கிறது.
அதோடு அந்தத் தெப்பக்குளம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அளித்திருக்கும் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் நீளம், அகலத்தில் தொடங்கி, அதனை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி எனப் பத்துக்கும் அதிகமான கேள்விகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு நீளம், அகலத்தை மட்டும் பதிலாகத் தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை, மீதமிருக்கும் கேள்விகள் தொடர்பாகத் தங்களிடம் ஆதாரம் இல்லை எனத் தெரிவித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தெப்பக்குளம் தொடர்பான விவரங்கள் இல்லை எனக் கைவிரிக்கும் இந்து சமய அறநிலையத்துறை, வருங்காலத்தில் அந்தத் தெப்பக்குளமே இல்லை எனும் சூழலை உருவாக்கிக் கொண்டிருப்பதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தெப்பக்குளத்தை பராமரிக்காமல் இழுத்து மூடிவிட்டு அங்கு வணிக ரீதியிலான கட்டடங்களை கட்டி வருவாய் ஈட்ட முடிவு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பக்தர்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் எனப் பக்தர்கள் அளித்த மனுவைப் பெற்றுக் கொண்ட இணை ஆணையர் கோயில் பிரகாரத்திற்குள் தெப்பக்குளம் வரவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
பழமையும் தொன்மையும் வாய்ந்த நீர் ஸ்தலமாக விளங்கக்கூடிய, மதுரை திருவேப்புடையார் கோயில் தெப்பக்குளத்தை புதுப்பித்துப் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















