சிவகங்கை காளையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிவரும் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். கிராமங்களைத் தூய்மைப் படுத்தி, மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் தங்குவதற்கு இடமின்றி படும் சிரமங்களை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 20க்கும் அதிகமான நிரந்தர தூய்மைப் பணியாளர்களும், 20க்கும் அதிகமான தினக்கூலி தூய்மைப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். வீடு, வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிப்பது, அதனைத் தரம்பிரிப்பது, பொது நிகழ்ச்சிகளுக்கான தூய்மைப் பணிகளையும் இந்தத் தூய்மைப் பணியாளர்களே செய்து வருகின்றனர்.
வசிப்பதற்கு தங்களுக்கென நிரந்தரமாக ஒரு இடம் இல்லாத இந்தத் தூய்மைப் பணியாளர்கள் கண்மாய் ஓரங்களிலும், புறம்போக்கு பகுதிகளிலும் சிறு வீடுகளை அமைத்துத் தங்கி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களில் சிலருக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் வீட்டுமனைப்பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு அதற்கான தொகை வழங்கப்படாத காரணத்தினால் அங்கிருந்த தூய்மைப் பணியாளர்களை வெளியேற்றிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தங்களுக்கென நிரந்தரமாக ஒரு இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தின் பரிசீலனையிலேயே நீண்ட ஆண்டுகள் இருப்பதாகக் கூறுகின்றனர் துாய்மை பணியாளர்கள். தூய்மைப் பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கான ஆவணங்கள் ஆதி திராவிடர் நலத்துறைக்கு அனுப்பபட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்தும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மீண்டும் மீண்டும் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை எனத் தூய்மைப்பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஊரைத் தூய்மைப்படுத்தி மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரமாகத் தங்குவதற்கான பட்டாவுடன் கூடிய குடியிருப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமையாகும்.
















