சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் பறக்கும் கார்கள் உற்பத்தியைச் சோதனை முறையில் சீன நிறுவனம் தொடங்கி உள்ளது.
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் விரைவில் பறக்கும் கார்களை உற்பத்தி செய்யவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாக, பறக்கும் கார்கள் உற்பத்தியைச் சீன நிறுவனம் தொடங்கியிருக்கிறது.
தெற்கு சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் முதல் பறக்கும் கார் தயாரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக ஆண்டுக்கு 5 ஆயிரம் பறக்கும் கார்களை இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விரைவில் இது ஆண்டுக்கு 10 ஆயிரம் பறக்கும் கார்களைத் தயாரிக்கும் வகையில் மேம்படுத்தப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளிலேயே, மிகப்பெரிய அளவில் திறன் பெற்ற தொழிற்சாலையாக இது அமைந்திருப்பதாகவும், அதன் முழு செயல்திறனும் நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு பறக்கும் கார் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
















