சுமார் ஒன்றரை லட்சம் பேரிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும், அவரிடம் இருந்து 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
உலகம் முழுவதும் இதுவரை ஏராளமான பண மோசடிகள் நடைபெற்றுள்ளன. அதனை மையப்படுத்தி Catch Me If You Can, The Wolf of Wall Street போன்ற படங்களும், SCAM 1992 போன்ற பல வெப் சீரியஸ்களும் வந்துள்ளன. ஆனால், இவை அனைத்தையும் ஓரங்கட்டும் அளவுக்குச் சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் பண மோசடி செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதுவும் ஒரு லட்சத்து 28 ஆயிரம் பேரை ஏமாற்றி, 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அவர் சொத்து சேர்த்து வைத்துள்ளது, அனைவரையும் வாய்ப்பிளக்க செய்துள்ளது. Zhimin Qian என்பவர் சீனாவில் Bluesky Greet என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். பிட்காயினில் முதலீடு செய்தால், 200 சதவீதம் லாபம் கிடைக்கும் என அவர் விளம்பரம் செய்துள்ளார்.
உயர் பதவிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள்தான் அவரது முக்கிய இலக்காக இருந்துள்ளனர். முதலீட்டாளர்களை ஈர்க்க சதுரங்க வேட்டை பாணியில் அவர் பல்வேறு பார்ட்டிகளையும் நடத்தியுள்ளார். இதனை நம்பிய பலர், அவரது நிறுவனத்தில் முதலீடு செய்ய புற்றீசல் போல கிளம்பியுள்ளனர். தான் கூறியது போலவே, சில மாதங்களுக்கு 200 சதவீத லாபத்தை அவர் வழங்கியுள்ளார்.
இதனால் உத்வேகமடைந்த பயனாளர்கள் அப்பாவித்தனமாக மேலும் பல கோடி ரூபாயை Bluesky Greet நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் Zhimin Qian இடம் கணக்கிட முடியாத அளவில் பணம் சேர்ந்தது. இந்தச் சூழலில், Bluesky Greet நிறுவனத்தின் அசுர வளர்ச்சி சீனா அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
என்ன ஏது என்று விசாரிக்கத் தொடங்கியபோதுதான் தெரிந்தது, Zhimin Qian எவ்வளவு பெரிய மோசடியை அரங்கேற்றியுள்ளார் என்பது. உடனடியாக அவரை கைது செய்வதற்கான முயற்சியில் போலீசார் இறங்கினார். ஆனால், சீன போலீசார் இப்படி துப்பு துலக்கி உண்மையைக் கண்டுபிடித்து முடிப்பதற்குள் Zhimin Qian லண்டனுக்கு பறந்துவிட்டார்.. இது நடந்து 2017ம் ஆண்டு. அங்கு மாதம் 20 லட்சம் ரூபாயில் பிரமாண்ட வீட்டை வாடகைக்கு எடுத்த அவர், ஒரு மாகாராணி போல வாழத் தொடங்கினார்.
அவர் மோசடி செய்த பணம் அனைத்தையும் கிரிப்டோகரன்சியாக மாற்றி வைத்திருந்தார். அவரது நல்ல நேரம், அந்தத் தொகை அனைத்தும் 20 மடங்கு வளர்ச்சி கண்டது. எனவே, அதனைக் கொண்டு லண்டனில் பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்தார். தனி தீவு ஒன்றை வாங்கவும், சுவிஸ் வங்கி போன்று வங்கி ஒன்றை தொடங்கவும் அவர் முயன்றால் என்றால், அதிலிருந்தே அவரிடம் எவ்வளவு பணம் இருந்திருக்கும் என்பதை யூகித்துகொள்ளலாம்.
2018ம் ஆண்டு 471 கோடி ரூபாய்க்கு இங்கிலாந்தில் சொத்து வாங்க முயன்றபோது, அந்நாட்டு அதிகாரிகளுக்கு அவர்மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரின் பின்னணி குறித்து அறிந்த பிரிட்டிஸ் அதிகாரிகளுக்கும் தலை சுற்றியது. அவரை கைது செய்ய முயன்றபோது மீண்டும் தலைமறைவாகிவிட்டார். இந்தச் சூழலில்தான், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் Zhimin Qian-ஐ போலீசார் சுற்றி வளைத்தனர்.
அவரது வீட்டில் இருந்து மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்மீதான மோசடி வழக்கு பல மாதங்களாக நடைபெற்று வந்தது. ஆனால், தொடக்கம் முதலே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த அவர், கடந்த செப்டம்பர் மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்குத் தற்போது 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் இருந்து 61 ஆயிரம் பிட்காயின்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரின் மதிப்பு ஆரம்பத்திலேயே பார்த்தது போல, 53 ஆயிரம் கோடி ரூபாய். அந்த தொகையை பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒற்றை பெண்மணியாக இருந்கொண்டு 2 நாடுகளின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டி Zhimin Qianதான் தற்போது அனைத்து முதலீட்டாளர்கள் மத்தியிலும் முக்கிய பேசுபொருளாக உள்ளார்.
















